எலும்பு முறிவுக்கு என்ன முதல் உதவிகள்?

‘பொதுவாக ஓர் எலும்பின் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்படும்போது எலும்பு முறிவு ஏற்படுகிறது. தோல் கிழிந்து காயத்துடன் ஏற்படும் எலும்பு முறிவு, தோல் கிழியாமல் ஏற்படுவது, எலும்புடன் இதர உறுப்புக்களும் சேதம் அடைவது, குழந்தைகளின் மென்மையான எலும்புகளில் ஏற்படும் முறிவுகள் எனப் பல வகைகள் உள்ளன. அழுத்தத்தின் காரணமாக  எலும்பில் விரிசல் ஏற்படுவதை ‘ஹேர்லைன் ஃப்ராக்சர்’ என்பார்கள். அறுவைசிகிச்சை இல்லாமலேயே பெரும்பாலும் மாவுக் கட்டு போட்டு ஹேர்லைன் ஃப்ராக்சரால் பாதிக்கப்பட்ட எலும்பை, பழையபடி கூடவைக்கலாம். ஆனால், இளையவர்களைவிட வயதானவர்களுக்கு எலும்பு கூடுவதற்கு அதிகக் காலம் பிடிக்கும். இதனால் முதியவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’

‘எலும்பு முறிந்திருக்கிறது என்பதற்கு என்ன அறிகுறிகள்?’

‘கடுமையான வலி, பாதிக்கப்பட்ட பகுதியை அசைப்பதில் சிரமம், வீக்கம், ரத்தக் கசிவு, உறுப்பு சிதைந்திருப்பது அல்லது அசாதாரணமாக வளைந்திருப்பது, தோலைக் கிழித்துக்கொண்டு எலும்பு வெளியே நீட்டி நிற்பது போன்றவற்றை அறிகுறிகளாகச் சொல்லலாம். பாதிக்கப்பட்ட கை அல்லது காலில் விரல்கள் மரத்துப்போயும் நீல நிறமாக இருப்பதும் எலும்பு முறிவுக்கான அறிகுறிகள்தான். பொருந்தி இருக்கும் மூட்டில் இருந்து ஓர் எலும்பு விலகுவதும் எலும்புமுறிவைப் போன்றதுதான்.’

‘எலும்பு முறிவுக்கு என்ன முதல் உதவிகள்?’

‘முறிந்த விதத்துக்கு ஏற்பவும் எந்த எலும்பு முறிந்திருக்கிறது என்பதைப் பொருத்தும் செய்ய வேண்டிய முதல் உதவியும் மாறுபடும். இதைச் சுருக்கமாக ‘ரைஸ்’ (RICE – Rest, Ice, Compression and Elevation ) என்று சொல்வார்கள்.

அதாவது, எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவரை முதலில் சரியான கோணத்தில் படுக்கவைக்க வேண்டும் – இது ரெஸ்ட். அவரது வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் விதமாக ஐஸ் கட்டியைப் பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கலாம். ஐஸை நேரடியாகத் தோல் மீது வைக்காமல் ஒரு துணியில் சுற்றிவைப்பது நல்லது.

அடுத்ததாக கம்ப்ரஷன். மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே உடைந்த இடத்தில் சுத்தமான துணியைக்கொண்டு கட்டு போட வேண்டும்.

உடைந்த எலும்புகள் மீண்டும் விலகிவிடாமல் இருக்க அதைச் சற்றே உயர்வாக வைப்பதை – எலிவேஷன் என்று குறிப்பிடுவோம்.

ஒருவருக்கு அடிபட்ட இடத்தில் காயத்தின் மேல் இருக்கும் துணியை வெட்டி எடுக்கலாம். ஆனால், கழுவக் கூடாது; தொடவும் முயற்சிக்க வேண்டாம். எலும்பு முறிவுடன் காயமும் ஏற்பட்டிருந்தால், சுத்தமான துணியால் கட்டுப்போட்டு முதலில் ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். மூச்சு சீராக வருகிறதா என்று பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்த வேண்டும். வேறு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். காயம் பட்ட இடத்தை அசைக்கக் கூடாது. கையில் முறிவு ஏற்பட்டிருந்தால், 90 டிகிரி கோணத்தில் நெஞ்சோடு சேர்த்துக் கையை அசையாமல் வைத்திருக்கச் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் மயங்கி இருந்தாலோ அல்லது மூச்சிரைப்புடன் இருந்தாலோ, தலை, கீழ் நோக்கி இருக்குமாறு மெள்ளப் படுக்கவைக்கலாம். கழுத்தைத் திருப்பக் கூடாது.”

‘எலும்பு முறிவைத் தடுக்க என்ன செய்யலாம் டாக்டர்?’

‘இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது ஓட்டுபவர், பின்னால் அமர்ந்திருப்பவர் இருவருமே ஹெல்மெட் அணிவது நல்லது.  இரு சக்கர வாகனங்களில் ‘க்ராஷ் பார்’ கட்டாயம் பொருத்த வேண்டும். விளையாடும்போது உரிய பேட்களை (Pads) அணிவது எலும்பு முறிவைத் தவிர்க்கும். குழந்தைகள் விளையாடும்போது எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும். தரையில் தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்றவை சிந்தி இருந்தால், உடனடியாகத் துடைத்துத் தரையை உலர்வாக வைத்திருப்பது அவசியம். குளியல் அறை மற்றும் கழிப்பறைகளில் தரைப் பகுதி வழவழப்பாக இல்லாமல் சொரசொரப்பாக இருக்குமாறு அமைத்துக்கொள்ளலாம்!’

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *